திருமணத் தடை நீக்கும் நவாஹ பாராயணம்!

கம்ப ராமாயணத்திலுள்ள சுந்தர காண்டத்தை ஒன்பது நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்துவந்தால் விரைவில் திருமணத் தடை நீங்கும் மற்றும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இவ்வாறு ஒன்பது நாட்கள் பாராயணம் செய்வதை, ‘நவாஹ பாராயணம்’ என்பர். சுந்தர காண்டம் மொத்தம் 68 ஸர்க்கங்களைக் (பிரிவுகள்) கொண்டது. இவற்றைப் பாராயணம் செய்யும் முறை மற்றும் அப்போது செய்ய வேண்டிய நிவேதனங்கள் குறித்துக் காண்போம்.

முதல் நாள் 1 முதல் 5 ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். அப்போது சர்க்கரைப் பொங்கல் நிவேதம் செய்ய வேண்டும். இரண்டாம் நாள் 6 முதல் 15 வரையுள்ள ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். நிவேதனமாக பாயசம் மற்றும் கோதுமை அப்பம் சிறப்பு.

மூன்றாம் நாள் 16 முதல் 20 வரையிலான ஸர்க்கங்களை பாராயணம் செய்யலாம். இன்று எள் சாத நிவேதனம் உகந்தது. நான்காம் நாள் 21 முதல் 26 வரையான ஸர்க்கங்கள் பாராயணம் செய்ய வேண்டும். இன்று தேன் குழல் மற்றும் முறுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

ஐந்தாம் நாள் 27 முதல் 33 வரையிலான ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். இன்று தயிர் சாதம் நிவேதனம் செய்வது சிறப்பு. ஆறாம் நாள் 34 முதல் 40 வரையான ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். இன்று மோதகம் நிவேதனம் உசிதம்.

ஏழாம் நாள் 41 முதல் 52 வரையிலான ஸர்க்கங்கள் பாராயணம் செய்ய வேண்டும். இன்று முக்கனிகளான மா, பலா, வாழையை நிவேதனம் செய்தல் விசேஷம். எட்டாம் நாள் 53 முதல் 60 வரையான ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். இன்று வெண்பொங்கல் நிவேதனம் சிறப்பு. ஒன்பதாம் நாள் 61 முதல் 68 வரையிலான ஸர்க்கங்களை பாராயணம் செய்து முடிக்க வேண்டும். இன்று பால் பாயசம் நிவேதனம் விசேஷம்.

இப்படி சுந்தர காண்ட ஸர்க்கங்களைப் பாராயணம் செய்யும் முன்னர் ஒவ்வொரு நாளும் பாலும் கல்கண்டும் நிவேதனம் செய்ய வேண்டும். முடித்த பின்னர் மேற்சொன்ன நிவேதனங்களைச் செய்யலாம்.