ஆன்மிக திருத்தலங்களின் அதிசயத் தகவல்கள்!


* சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டியில் உள்ள 'சுட்டவிநாயகர்' கோயிலில், தீப்பெட்டி தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்து எரிந்த தீக்குச்சியை வீட்டில் சேமித்து வைக்கிறார்கள். காரணம் விபத்து நேராமல் இந்த விநாயகர் காப்பார் என்பது நம்பிக்கை.

* சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும், உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

* திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துக் கொண்டு சயனித்திருக்கும் கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். அதனால் பெருமாளுக்கு வேதநாராயணன் என்று பெயர்.


* பொதுவாக நரசிம்மர் மடியில் லட்சுமி அமர்ந்திருந்தால் சாந்தமூர்த்தி ஆதிலட்சுமி என்று அழைக்கப்படுவார். ஆனால் நாமக்கல்லில் நரசிம்மரின் மாலையில் லட்சுமி வாசம் செய்கிறாள்.

* திருப்பத்தூரில் இருந்து 6 கி,மீ தொலைவில் உள்ள பெருச்சி எனும் ஊரில் அமைந்துள்ளது ஆண்ட பிள்ளை நாயனார் என்னும் புகழ்பெற்ற பழமையான சிவாலயம். இங்கு உள்ள நவபாஷாண கால பைரவர் சிலைக்கு அணிவிக்கப்படும் வடைமாலை சற்று நேரத்தில் நீல நிறமாக மாறிவிடுகிறது. இதை யாருக்கும் பிரசாதமாக தருவதில்லை. கோவிலுக்கு வெளியே வீசி விடுகிறார்கள். காகம் போன்ற பறவைகள் கூட இதைத் தொடுவதில்லை. வடைமாலை மட்டும் இன்றி, சுண்டல் மாலை அணிவித்தாலும் விஷமாகி நீல நிறமாக மாறி விடுகிறதாம்.

* திருப்பூரில் உள்ள குண்டடம் வடுகநாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.

* வைகாசி விசாகத்தன்று திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை இடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

* சகுனிக்கு கோவில்: கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இதனை எதிர்மறை குணத்திற்கு முன்னுதாரணமாக' வணங்குகிறார்கள்.

* வேலூர் மாவட்டம் வன்னிமேடு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர் மற்றும் சனீஸ்வரர் அடுத்தடுத்து காட்சி அளிக்கின்றனர். இந்த சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் 17 பாகற்காய்களை மாலையாக்கி, சூட்டி எள் தீபம் ஏற்றி வணங்கினால், சனீஸ்வரர் வாழ்க்கையில் உள்ள கசப்பைப் போக்குவார் என்று நம்பப்படுகிறது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோயில் உள்ள திருமாமணி மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்று அழைக்கப் படுகிறது. ஆனால், இம் மண்டபத்தில் இருப்பது 953 தூண்கள்தான். ராப்பத்து திருநாட்களில் சுவாமி நம் பெருமாள் இங்கு எழுந்தருள்வார். அந்தப் பத்து நாட்கள் மட்டும் மண்டபத்தில் 1000 தூண்கள் வந்து விடும். எப்படி? வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு மாதம் முன்பே இந்த மண்டபத்தின் முன் பந்தல்கால் நடுவிழா நடைபெறும். 47 தென்னை மரங்களால் ஆன பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுவிடும். இத்ன் மூலம் 953 கல் தூண்களும் 47 தென்னை மரத் தூண்களும் சேர்ந்து 1000 கால் மண்டபம் பூர்த்தியாகி, பெருமாளை வரவேற்கத் தயாராகிவிடும்.

* தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடைவீடுகள் இருப்பதுபோல இலங்கையிலும் முருகனின் அறுபடை வீடுகள் உள்ளன. அவை: கதிர்காமம், நல்லூர் கோவில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப்புலோலி ஆகியன ஆகும்.

* கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாரையூர் தலத்தில், நவக்கிரக நாயகரான சனி பகவான், தன் குடும்ப சகிதமாக அருள் பாலிக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம். இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலில், கருவறைக்கு எதிரில், தனி சந்நிதியில் ஸ்ரீ சனீஸ்வரர் தன் இரு மனைவியரான, மந்தாதேவி, ஜேஷ்டாதேவி ஆகியோருடனும், குளிகன், மாந்தி என்ற இரு மகன்களுடனும் குடும்ப சமேதரராக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.