நந்தியெம்பெருமானின் தத்துவம் தெரியுமா?


நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கி, நான்காம் காலான ஞானப் பாதத்தினால் பரம்பொருளை வணங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றன ஆகம நூல்கள். ‘நந்துதல்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் நந்தி என்ற சொல் வந்தது. ‘நந்துதல்’ என்றால் மேலேறிச் செல்லுதல் எனவும் பொருளுண்டு.

ஒரு யோகி பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரக் கனலை எழுப்பும் அமைப்பும் நந்தியிடம் உண்டு. ஔவையார் கூட தனது விநாயகர் அகவலில், ‘மூலாதாரத்தின் முண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து’ எனும் வரிகள் நந்தியெம்பெருமானை நினைவுறுத்தும். நந்தியின் துணையால் மேலேறிச் சென்று ஈசனைக் காண வேண்டும் என்பதே இதன் முழுப்பொருள். நந்தியின் அருளில்லாது ஈசனைக் காண இயலாது என்கின்றன சைவ ஆகமங்கள்.