தங்கம் நம்மிடம் தாராளமாக சேர வேண்டும் என்றால் மகாலட்சுமி, தனலட்சுமி போன்றவர்களின் அருள் பரிபூரணமாக இருக்க வேண்டும்.

தங்களுடைய பிற்கால வாழ்க்கைக்கு தேவைப்படும் அல்லது தங்களுடைய பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவைப்படும் என்பதற்காக பெற்றோர்கள் தங்களால் இயன்ற அளவு பணத்தை சேர்த்து வைத்து சிறிது சிறிதாக தங்கத்தை வாங்கி வைப்பார்கள். இந்த தங்கம் நம்முடைய கஷ்ட காலத்தில் நமக்கு பெரிதும் கைகொடுக்கும் என்றும் கருதுவார்கள். அப்படி வாங்கிய தங்கம் நம்மிடம் நிரந்தரமாக நிலை இருப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சுமத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.


தங்க நகை வாங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அதற்காக நாம் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு தங்கத்தை வாங்கினாலும் அந்த தங்கம் நம்முடைய வீட்டிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் பலருக்கும் அது நடக்காமல் போய்விடுகிறது. தங்கம் வாங்கிய அடுத்த நிமிடமே ஏதாவது ஒரு சூழ்நிலை ஏற்பட்டு அந்த தங்கத்தை அடமானம் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலருக்கோ அந்த தங்கத்தை வாங்குவதற்குரிய பாக்கியமே கிடைக்காமல் போயிடும். தங்கத்தை அடமானம் வைத்தாலும் அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகையை திருப்புவதற்குரிய வழிகள் ஒரு சிலருக்கு கிடைத்தாலும், பலருக்கும் கிடைக்காத சூழ்நிலையே இருக்கிறது.

தங்கம் நம்மிடம் தாராளமாக சேர வேண்டும் என்றால் மகாலட்சுமி, தனலட்சுமி போன்றவர்களின் அருள் பரிபூரணமாக இருக்க வேண்டும். இவர்களின் அருள் இருந்தால் மட்டும்தான் நம்மிடம் தங்கம் சேரும். தங்கத்தை வாங்க முடியும். தங்கம் நம் வீட்டில் நிலைத்திருக்கும். இவர்களின் அருள் இல்லாத பட்சத்தில் தங்கத்தை வாங்க முடியாது, வாங்கினாலும் அது வீட்டில் நிலைத்திருக்காது. இதை சொர்ண தோஷம் என்று கூட கூறலாம்.

பொதுவாகவே நாம் ஒவ்வொருவரும் தங்கத்தை நல்ல நாள் பார்த்து, நேரம் பார்த்து வாங்குவோம். இதோடு மட்டுமல்லாமல் ஒரு சிலர் இவர்கள் கையால் வாங்கினால் தான் தங்கம் சேரும் என்று கூட வாங்குவார்கள். மேலும் புதிதாக நாம் தங்கத்தை வாங்கியதும் அதை அப்படியே அணிந்து கொள்வோம். அது முற்றிலும் தவறு. தங்கத்திற்கும் தோஷம் என்பது இருக்கும். அந்த தோஷத்தை நீக்கிவிட்டு அதை அணிந்தால் தான் நமக்கு அது நன்மையை தரும். புதிதாக வாங்கிய தங்கத்தை எந்த முறையில் அணுகினால் அந்த தங்கம் நம்மிடம் நிரந்தரமாக இருக்கும் என்று வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு எளிமையான வழிமுறையை தெரிந்து கொள்வோம்.


என்றைக்கு தங்கம் வாங்கினாலும் அதை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரம் நிறைய உப்பை கொட்டி அதற்குள் நாம் வாங்கி வைத்திருக்கும் அந்த தங்கம் வைத்த மூட்டையை அந்த உப்பிற்குள் வைத்து விட வேண்டும். 24 மணி நேரம் அந்த தங்க நகை உப்பிற்குள்ளேயே இருக்க வேண்டும்.

24 மணி நேரம் கழித்து தங்க நகையை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு வீட்டில் இருக்கக் கூடிய குலதெய்வத்தின் படத்திற்கோ அல்லது இஷ்ட தெய்வத்தின் படத்திற்கோ அல்லது மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு அணிவிக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் தெய்வத்திடமே அந்த நகை இருக்கட்டும். பிறகு அந்த நகையை நீங்கள் எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தங்கத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்குவதோடு நாம் வாங்கிய தங்கம் நம் வீட்டிலேயே நிலைத்திருக்கும். அந்த தங்கத்தால் பல மடங்கு தங்கம் சேர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.