அனுமான் சிரஞ்சீவி வரம் பெற்ற கதை

அனுமன், மாருதி, ஆஞ்சநேயர், வாயு புத்திரன், ராம பக்தன் என்பது உள்ளிட்ட பல திருநாமங்களால் அழைக்கப்படும் அனுமன், சிரஞ்ஜீவி வரம் பெற்று தற்போது வரை அழிவில்லாமல் பூமியில் வாழ்வதாக சொல்லப்படுகிறது. அவருக்கு சிரஞ்ஜீவியாக இருக்கும் வரத்தை யார், எதற்காக, எந்த சமயத்தில் கொடுத்தார் என்ற கதையையும், காரணத்தையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். அஷ்ட சிரஞ்ஜீவிகள் என போற்றப்படுபவர்களில் அனுமன் மட்டுமே அனைவராலும் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

சிவ பெருமானின் ருத்ர அவதாரமான அனுமான், அதிதீவிர ராம பக்தர். சிரஞ்சீவி எனப்படும் சாகா வரம் பெற்ற அஷ்ட சிரஞ்ஜீவிகளில் இவரும் ஒருவர். அனுமான் மட்டுமின்றி அவரை போல் சிரஞ்ஜீவி வரம் பெற்ற மார்கண்டேயன், பரசுராமர், வேத வியாசர், அஸ்வத்தாமன், மாபலி சக்கரவர்த்தி, கிருபாச்சாரியார், விபீஷணன் ஆகியோரும் தற்போது வரை இந்த பூமியில் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இவர்களில் அனுமான் சிரஞ்சீவி பட்டம் எவ்வாறு பெற்றார் என்ற கதையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அனுமனுக்கு சிரஞ்ஜீவி எனப்படும் எப்போதும் சாகாமல் இருக்கும் வரத்தை அளித்தவர் பிரம்ம தேவரும், தேவர்களின் தலைவனான இந்திரனும் தான். அனுமன் குழந்தையாக இருந்த போது காற்றில் பறந்த படி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பளபளவென மின்னிய சூரியனை, பழம் என நினைத்து அதை பறிப்பதற்காக அதை நோக்கி விரைந்தார். எங்கே அனுமான் சூரியனை விழுங்கி விடுவாரோ என பயந்தான் இந்திரன். இதனால் ஹனுமனை தடுப்பதற்காக தனது வஜ்ராயுதத்தால் அனுமனை தாக்கினான்.

மிகவும் சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட அனுமன், மயங்கி விழுந்தார். அனுமனின் தந்தையான வாயு பகவான், காற்றில் மயங்கியபடி இருந்த அனுமனை மீட்டு குகை ஒன்றிற்கு கொண்டு சென்றார். தனது மகனின் இந்த நிலைக்கு காரணமான இந்திரன் மீது வாயு கடும் கோபம் அடைந்தார். இதனால் பூமியில் உள்ள காற்று அனைத்தையும் நீக்கினார். இதனால் உயிர்கள் அனைத்தும் பெரும் துன்பத்திற்கு ஆளாகின. இதைக் கண்டு மிரண்டு போன தேவர்கள், படைப்பின் கடவுளான பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தேவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, அனுமன் இருந்த குகைக்கு சென்றார் பிரம்மா. அனுமனை குணப்படுத்தினார் பிரம்மா. அங்கு வந்திருந்த அனைத்து கடவுள்களும் அனுமனுக்கு பலவிதமான வரங்கள் கொடுத்து, ஆசி வழங்கினர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு அற்புதமான வரத்தை அனுமனுக்கு அளித்தனர். இறுதியாக வரமளித்த பிரம்மா, எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படாத சிரஞ்ஜீவி வரத்தை அனுமனுக்கு அளித்தார். அந்த சமயத்தில் இந்திரனின் கோபமும் தணிந்தது. மனம் மாறி, அனுமன் மீது அன்பு கொண்ட இந்திரன், அனுமன் எப்போது விரும்புகிறோரோ அப்போது மட்டுமே அவரது மரணம் ஏற்படும் வரத்தை அளித்தார்.

அனுமன் அழிவில்லாமல் இன்றும் இந்த பூமியில் சிரஞ்ஜீவியாக வாழ்வதற்கு இன்னும் பல காரணங்களும், கதைகளும் புராணங்களில் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று, ராம பிரான் மீது அனுமன் கொண்ட தீவிர பக்தியே அவரது சிரஞ்ஜீவி தன்மைக்கு காரணம் என்றும், அவரது தொடர்ந்து ராம நாமத்தை ஜபித்துக் கொண்டே இருப்பதால் நித்ய சிரஞ்ஜீவியாக இருந்து, தன்னையும் ராம பிரானையும் வழிபடும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டிய வரங்களை கொடுத்து, அவர்களின் துன்பங்களை போக்கி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.