வேண்டிய வரத்தை அருளும் புரட்டாசி கிருத்திகை வழிபாடு

புரட்டாசி மாதம் என்பதே சிறப்புக்குரிய மாதம் தான். அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் என்பது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் பஞ்சமி திதியும் வருகிறது என்பதால் பெருமாள், வராகி அம்மன், முருகப்பெருமான் என்று அனைவரையும் வழிபடுவதற்கு உகந்த தினமாக திகழ்கிறது.


அன்றைய தினத்தில் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். புரட்டாசி கிருத்திகை வழிபாடு முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி விரதம் இருந்து வழிபாடு செய்தால் நாம் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று சிவபெருமானே கூறியிருக்கிறார்.

மேலும் நட்சத்திரத்திற்குரிய விரதம் இருந்து வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய கர்ம வினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஏதாவது ஒரு நட்சத்திரம் விசேஷமான நட்சத்திரமாகவும், சில தெய்வங்களை வழிபடுவதற்குரிய நட்சத்திரமாகவும் அதேசமயம் விரதம் இருந்து வழிபாடு செய்யும் நட்சத்திர நாளாகவும் அந்த நாள் திகழ்கிறது. உதாரணமாக தைப்பூசம், வைகாசி விசாகம், மாசி மகம், திருவாதிரை என்று கூறிக்கொண்டே செல்லலாம்.

இவை அனைத்துமே நட்சத்திரங்கள் வரும் நாளை குறிக்கக்கூடியது. இப்படிப்பட்ட நட்சத்திர நாட்களில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய கர்ம வினைகள் தீரும் என்றும், அதனால் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் விலகும் என்றும் கூறப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாள் அன்று நாம் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தோம் என்றால் திருமண தடை விலகும், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விரும்பிய வேலை கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.

காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வரளி மலர்களை மாலையாக போட்டுக் கொள்ளுங்கள். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பு. உபவாசம் இருக்க இயலாதவர்கள் தங்களால் இயன்ற அளவு விரதம் இருந்து கொள்ளுங்கள்.

மாலை நேரத்தில் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம்,, கந்த குரு கவசம், வேல்மாறல் போன்ற பாடல்களில் ஏதாவது ஒன்றை பாராயணம் செய்து முருகப்பெருமானுக்கு பாசிப்பருப்பு பாயாசம் அல்லது திணை மாவு போன்றவற்றை நெய்வேதியமாக வைத்து நட்சத்திர கோலம் போட்டு அந்த நட்சத்திரம் போல் ஆறு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபமேற்றி வேண்டும். இந்த தீபத்தை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதலை கூறி முருகப்பெருமானை வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருளால் விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும்.